சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 180 நபர்கள் மீது 170 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடம் இருந்து சுமார் 1931.560 கிலோ கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.
இது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். குற்றங்களை தடுத்திட தயங்காமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.