நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம்… சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு.!!

ந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்..

நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இருந்து பெங்களூரூ திரும்பிய மோடி இஸ்ரோ மையத்திற்கு சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது பிரதமருடன் விஞ்ஞானிகள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அதேபோல் மகளிர் விஞ்ஞானிகளும் தனியாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது :

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால் பதித்த அந்த நேரத்தில் நான் உணர்ந்த மகிழ்ச்சி அரிதானது. நான் ஒரு வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை.’

மெதுவாக தரையிறங்கும் தருணத்தில் மிகவும் அமைதியற்ற நிலையில் இருந்தேன். தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், என் மனம் இந்தியாவில் தான் இருந்தது.

உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன். நீங்கள் தேசத்தை எந்த அளவு உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

நீங்கள் ஒரு முழு தலைமுறையை எழுப்பி, அவர்கள் மீது ஆழமான முத்திரையை பதித்துள்ளீர்கள்.சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை 8 பில்லியன் டாலரில் இருந்து 16 பில்லியன் டாலராக மாறும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சந்திரயான்-3 தரையிறங்கிய நிலவில் உள்ள இடம் இனி ‘சிவசக்தி என்று அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும். இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி ‘சிவசக்தி’ வரவிருக்கும் தலைமுறையினரை மக்களின் நலனுக்காக அறிவியலை பயன்படுத்த ஊக்குவிக்கும். ‘மக்கள் நலமே எங்களின் உச்சக்கட்ட அர்ப்பணிப்பு.

2019-ல் சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை உண்ர்த்தவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது. சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்.’இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்..