கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேமதாஸ், பாபு மற்றும் போலீசார் சொக்கம்புதூர் – முத்ண்ணன்குளம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய் (வயது 24) கோவை தீத்திபாளையம், அருள் நகரை சேர்ந்த ஜலாலுதீன் (வயது 50) கோவை இடையர்பாளையம் பி. அண்ட. டி. காலனியை சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் ( வயது 40) என்பதும் இவர்கள் ரவுடி கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது .அந்த கும்பலில் இருந்த சஞ்சய் குமாரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கைதுப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த ஆண்டு சஞ்சய் ராஜா,மதுரை ரவுடி சத்திய பாண்டியை ஆவாரம்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் தொடர்புடையது என்பதும் சஞ்சய் ராஜா தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. தற்போது இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச் சென்று கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக கூறினார்கள். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான செல்வபுரம் வடக்குஹவுசிங் யூனிட் சேர்ந்த சல்பல் கான் ( வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள போலீஸ்நிலையங்களில் கொலை மிரட்டல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. மேலும் சஞ்சய் ராஜா காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கில் அவர்கள் 2 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவையைச் சேர்ந்த இந்த கும்பல் துப்பாக்கியை வாங்கியது எப்படி? யார் மூலம் வாங்கினார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தற்போது கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது:- கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. வடமாநிலங்களில் தயார் செய்யப்பட்டது. இது நாட்டுகைத் துப்பாக்கி. சிறையில் உள்ள சஞ்சய் ராஜாவிற்கு தான் இந்த துப்பாக்கியை குறித்த முழு விவரங்களும் தெரியும் .அவரின் உத்தரவு பேரிலே கைதான சஞ்சய் குமார், ஜலாலுதீன்உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. எனவே ரவுடிசஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்..