கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் (47). கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது உடையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் அங்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமாரிடம் இருந்த செல்போனை பறித்தார். பின்னர் பணம் வேண்டும் என முத்துக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது முத்துக்குமார் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் கீழே கிடந்த செங்கலை எடுத்து முத்துக்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். மேலும குணசேகரன் கையில் வைத்திருந்த கத்தியால் முத்துக்குமாரின் தலையில் குத்தினார். அப்போது முத்துக்குமார் சத்தம் போடவே பள்ளி வளாகத்தில் இருந்த வாட்ச்மேன் அங்கு ஓடி வந்தார். அப்போது குணசேகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .பிறகு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .தொடர்ந்து முத்துக்குமார் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் உடையாம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.