கடைக்குள் புகுந்து மாம்பழங்கள் திருடிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்.!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே இரவில் பூட்டிக் கிடந்த கடைக்குள் புகுந்து ₹600 மதிப்பு உள்ள மாம்பழங்களை திருடிய சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

கேரளாவில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு படிப்படியாக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 20க்கும் மேற்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. 4 இன்ஸ்பெக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் இடுக்கி மாவட்ட ஆயுதப்படை முகாமில் பணிபுரிந்து வந்த ஷிகாப் என்ற போலீஸ்காரர் கடந்த செப்டம்பர் மாதம் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு பழக்கடையில் புகுந்து ₹600 மதிப்பு உள்ள மாம்பழங்களை திருடினார். இது தொடர்பாக பழக்கடை உரிமையாளர் காஞ்சிரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடை அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது மாம்பழங்களை திருடியது போலீஸ்காரர் ஷிகாப் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான ஷிகாப்பை பின்னர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பலாத்காரம், வீடு புகுந்து தாக்குதல் ஆகிய 2 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதற்கிடையே ஷிகாப்பை டிஸ்மிஸ் செய்து இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாக்கோஸ் உத்ரவிட்டுள்ளார்.

வெளிநாடு சென்றவரும் டிஸ்மிஸ்: இடுக்கி மாவட்டம் கரிங்குன்னம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜிம்மி ஜோஸ். அவரது மனைவி துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு மனைவியை பார்ப்பதற்காக 107 நாள் விடுமுறை எடுத்து ஜிம்மி ஜோஸ் துபாய்க்கு சென்றார். விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி பணியில் சேர வேண்டும்.

ஆனால் அவர் பணிக்கு திரும்பவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காளியார் இன்ஸ்பெக்டருக்கு இடுக்கி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் ஜிம்மி ஜோஸ் வெளிநாட்டிலேயே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்து இடுக்கி மாவட்ட எஸ்பி உத்திரவிட்டுள்ளார்.