டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். சிபிஐ உடன் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை ஜூன் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். எனினும் சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனையின்படி அவர் தலைமைச் செயலகத்திற்கு இதுவரை செல்லவில்லை.
இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதால், சட்டம் மற்றும் நீதிக்கான நடவடிக்கைகள் தடைபடுவதோடு, டெல்லியில் அரசியலமைப்பு அமைப்பு சீர்குலைந்துவிடும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடிக்க முடியாது எனக் கூறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அவர் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்வது அதிகாரம் தொடர்பான விவகாரம் என்றும், டெல்லி துணை நிலை இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இதில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கலாமா இல்லையா என்பதில் நீதிமன்றம் தலையிடுவதற்கான சட்டப்பூர்வ உரிமை என்ன? துணை நிலை ஆளுநர் விரும்பினால் நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் அதனை விரும்ப மாட்டோம் என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.