புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை கொண்ட குழு கடந்த 14-ம் தேதி தேர்வு செய்தது. மறுநாள் இருவரும் தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த மனு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏடிஆர் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார். தேர்வு நடைமுறையில் உள்ள குறைபாடுகளையும் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அவசரமாக நியமனம் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். தேர்தல் நெருங்கிவிட்டது. நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை’ என்றார்.
இதையடுத்து மனுதார்களின் வாதங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த நீதிபதிகள், புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டனர்.
‘தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். பொதுவாக இடைக்கால உத்தரவின் மூலம் நாங்கள் ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பதில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட இத்தருணத்தில் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை நிறுத்தி வைக்க இயலாது. அவ்வாறு நிறுத்தி வைத்தால் அது குழப்பம் மற்றும் நிச்சயமற்ற சூழலுக்கு வழிவகுக்கும்’ என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.