சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் நகர தொடங்கியது.
நாகைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பருவ மழை தொடங்கிய நிலையில் விட்டு விட்டு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம், புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இதற்கும் ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட உள்ளது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக வலுப்பெறும் எனவும், அவ்வாறு உருவானால் அதற்கு ‘ஃபெங்கல்’ என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. இதன் காரணமாக மழையும் எதிர்பார்த்த அளவு இல்லை. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக ஊட்டி போல ஜில் கிளைமேட் ஆக உள்ளது.
மழை குறைந்ததால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று காலை வலுப்பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மணி நேரத்திற்கு மேல் அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 490 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்த நிலையில் தற்போது 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வரும் 30 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வங்கக் கடலில் வலுப்பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு வரும்போது வலு இழந்து தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் எனத்தெரிகிறது.
சென்னையில் குளிர்ச்சியான சூழலுடன் மார்கழி மாதம் அதிகாலை நேரம் போல கிளைமேட் உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோர பகுதிகளை தொட்டபடி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.
வங்க கடலில் புயல் சின்னம் நிலவுவதால் மரக்காணத்தில் 2-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை காசிமேடு பகுதியில் தரைக்காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.