உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு வியூக அமைப்பிற்கான 8வது மாநாடு கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது.
அப்பொழுது மாநாட்டில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பயங்கரவாதத்தை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்றும், இஸ்லாமிய வெறுப்பு, சீக்கிய எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு அல்லது இந்து விரோத எதிர்ப்பு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
மதம், இனம், பண்பாடு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நல்ல பயங்கரவாதிகள் அல்லது கெட்ட பயங்கரவாதிகள் என வேறுபாடு காட்டக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வலதுசாரி பயங்கரவாதம் அல்லது இடதுசாரி பயங்கரவாதம் என சில நாடுகளில் பின்பற்றப்படுவது பயங்கரவாதத்திற்கான நுழைவு வாயிலை திறப்பதற்கு சமம் என்றார். இதனிடையே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை அழைத்து அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.