ஆரம்பமாகிவிட்டது வர்த்தக போர்… டிரம்ப் போட்ட கையெழுத்து-இந்தியாவிற்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு..!

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா, தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.

டிரம்ப்பின் விதி காரணமாக இந்தியா, தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி – ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்திய நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது.

போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory’s Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும்.