நான்கே ஆண்டுகளில் நடைபெறும் ஐந்தாவது பொது தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிக பெரிய வெற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவரது தீவிர இடதுசாரி மதவாத கட்சிகள் அடங்கிய கூட்டணி பெரும்பான்மை வென்றுள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே, இஸ்ரேலில் நீடித்து வரும் அரசியல் பிரச்னைக்கு இந்த தேர்தல் முடிவுகள் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவுடனான இஸ்ரேலின் உறவு தொடர்ந்து வலுவடையும். அந்த வகையில், நெதன்யாகுவின் வெற்றியானது இந்திய – இஸ்ரேல் உறவை மேலும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2021ஆம் ஆண்டு வரை நெதன்யாகு ஆட்சியில் இருந்த வரை, இரு நாட்டு உறவு நல்ல வளர்ச்சியை கண்டது.
இந்த ஆண்டு ஜனவரியில், இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவை தொடங்கி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. இஸ்ரேல் தனது தூதரகத்தை பிப்ரவரி 1992 இல் டெல்லியில் திறந்தது. இஸ்ரேலில் உள்ள டெல் அவிவில் இந்திய தூதரகம் அந்த ஆண்டு மே 15 அன்று திறக்கப்பட்டது.
இந்தியாவுடனான இருதரப்பு உறவின் தீவிர ஆதரவாளரான நெதன்யாகு, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேலிய பிரதமர் ஆவார். அதற்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். இந்தியப் பிரதமர் ஒருவர், இஸ்ரேலுக்கு செல்வது அதுவே முதல்முறை.
கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது, அவருக்கும் நெதன்யாகுவுக்கும் இடையேயான நல்லுஉறவு பெரும் பேசுபொருளாக மாறியது. 1992இல் 200 மில்லியன் டாலராக இருந்த இர தரப்பு வர்த்தகம், 2021-2022இல் 7.86 பில்லியன் டாலராக வளர்ந்ததில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவை அளவிட முடியும். இந்த வர்த்தகம், இந்தியாவிற்கு சாதகமாகவே உள்ளது.
மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது, இந்தியாவும் இஸ்ரேலும் தங்களது இருதரப்பு உறவை வியூக ரீதியான கூட்டாண்மையாக உயர்த்தியது. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அறிவு அடிப்படையிலான கூட்டாண்மையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்து வருகிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் அளிப்பது உள்பட புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை அளிப்பது இதில் அடங்கும்.
கடந்த 2017ஆம் ஆண்டு, இஸ்ரேலுக்கு தனது முதல் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை. கடந்த 20 ஆண்டுகளாக, இரு தரப்பு உறவுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், இந்த பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இந்த உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் மோடி. அந்த பயணத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணத்தின் முடிவில், நெதன்யாகு மோடியுடன் கடற்கரையில் உலா வரும் படத்தை மோடிக்கு பரிசாக அளித்தார். “உங்கள் அன்பான வார்த்தைகள், அற்புதமான விருந்தோம்பல் மற்றும் இந்தியா-இஸ்ரேல் நட்புறவின் மீதான ஆர்வத்திற்கு எனது நண்பரே, பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி” என்று இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.