சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் சாலையில் நடமாடியது. காட்டு யானை நடமாட்டத்தை கண்ட சோதனை சாவடி பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அச்சமடைந்தனர். மேலும் யானை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்காமல் சற்று தொலைவில் தள்ளி நிறுத்தினர். சோதனைச் சாவடி அருகே வர முற்பட்ட காட்டு யானையை அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் யானையை பார்த்து இங்கே வராதே போ போ என மெதுவாக சத்தமிட்டனர். சத்தம் கேட்ட காட்டு யானை அப்பகுதியில் இருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் சோதனை சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..