கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் டி.கே மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் தண்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பீடி இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் மணிகண்டனை தாக்கினார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.