புதுடெல்லி: டிஜிட்டல் அல்லது இ-ரூபாய் புழக்கம் ரூ.130 கோடி அளவுக்கு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் ரூபாய் எனப்படும் இ-ரூபாயை ரிசர்வ் வங்கி, மொத்த விற்பனை பிரிவுக்கு கடந்தாண்டு நவம்பர் 1 முதலும், சில்லறைப் பிரிவுக்கு டிசம்பர் 1 முதலும் பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், பிப்ரவரி 28 நிலவரப்படி மொத்தம் ரூ.130 கோடி மதிப்புக்கு இ-ரூபாய் புழக்கத்தில் உள்ளது.
டிஜிட்டல் ரூபாய் மொத்த விற்பனை சோதனை முறை அறிமுகத்தில் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகள் பங்கேற்றுள்ளன.
பிப்ரவரி 28-ன் படி கணக்கிடப்பட்ட மொத்த டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில் சில்லறைப் பிரிவு ரூ.4.14 கோடியும், மொத்த விற்பனை பிரிவு ரூ.126.67 கோடியும் பங்களிப்பை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.