இங்கு தனிமனித ஆதிக்கம் கிடையாது; எவனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “அதிமுகவில் உள்ள அனைவரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் இருக்கின்றனர். இங்கே தனிமனித ஆதிக்கம் கிடையாது. இப்போதும் நான் தொண்டன் என்றுதான் என்னை சொல்கிறேன். தலைவன் என்ற வார்த்தையை எப்போதும் சொன்னது கிடையாது. தொண்டனோடு தொண்டனாக இருந்துதான் உங்களது ஆதரவோடு இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.
அ.தி.மு.க.வில் என்னை போல் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். எவனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் எவனாது வளர்ந்து வந்து இந்த கட்சியை ஆளுவான். அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை எவராலும் தொட்டு பார்க்க முடியாது. எவராலும் உரிமை கொண்டாட முடியாது. இது தொண்டனால் ஆளக்கூடிய கட்சி. தொண்டனுக்கு தான் முக்கியத்தும் உண்டு. தொண்டன் தான் இந்த கட்சிக்காக உழைக்கின்றான். தொண்டனின் உழைப்பில் தான் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்” என்று பேசினார்..