சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவி மருத்துவ உலகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் இருந்த காலிபணியிடங்களை துரிதமாக செயல்பட்டு அரசு நிரப்பியது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செலவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவ கல்வி இயக்குனரகம், ஊரக நலப் பணிகள் துறை உள்ளிட்டு துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது இதற்கு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
தற்போது சீனாவில் வேகமாக பரவி வரும் புதுவகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் மருத்துவ உள்கட்டமைப்புகளை மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அராசணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அடுத்த 40 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென மருத்துவ குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.