பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரச்சாரத்தின் போது பாஜக வெற்றி பெற்றால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறியதாக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறிய வருடம், தேதி இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ஆட்சிக்கு வந்தால் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக பாரத பிரதமர் கூறினார். ஆனால் இன்று நான் அவ்வாறு சொல்லவில்லை பொய் சொல்கிறீர்கள் என கூறுகிறார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் அக்கா வானதி சீனிவாசன் அவர்கள் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார். நான் திரும்பவும் சொல்கிறேன் மன்னிப்புலாம் கேட்க முடியாது. மோடி சொன்னது உண்மை. எங்கே பேசினார் எப்போது பேசினார் என்பதை தேதியோடு சொல்கிறேன்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என மோடி அவர்கள் தான் கூறினார்.
அதை அமைச்சர் அவர்களும், அருண் ஜெட்லி அவர்களும் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். நான் வேண்டுமானால் ஆதாரத்தை தரவும் தயார்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்…