டாஸ்மாக் கடை முன் டிரைவரை அடித்து கொலைசெய்த வழக்கில் அண்ணன் – தம்பி கைது.பரபரப்பு வாக்குமூலம்…

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவர், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பிரகாசுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அங்கு கிடந்த விறகு கட்டையால் பிரகாசின் தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கினார்கள். ‘இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் ,சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.தேடுதல் வேட்டையில் திண்டுக்கல் மாவட்டம் எரம்பட்டியை சேர்ந்தவர்களும்,தற்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நல்ல கவுண்டன் பாளையத்தில்தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் செல்வகுமார் ( வயது 25) சிவமணி (வயது 21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செல்வகுமார்,சிவமணி இருவரும் அண்ணன்- தம்பி என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் குட்டையின் அருகே மது அருந்தி கொண்டு இருந்த பிரகாஷ் மதுபானத்தில் கலக்க எங்களிடம் தண்ணீர் கேட்டார் .இதில் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறினோம் .அப்போது பிரகாஷ் போதையில் தண்ணீர் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து தகாத வார்த்தைகளால் எங்களை திட்டினார். இதனால் பிரகாசை விறகு கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.கொலை நடந்து 9 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் மாதையன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் சுல்தான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், ஏட்டுக்கள், ஆறுமுகம், மகராஜன், செல்லப்பாண்டி, போலீஸ்காரர் முத்து கருப்பன் ஆகியோர் கொண்ட தனி படையினரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.