இது பங்காளி கூட்டணி இல்லிங்க… நாங்க மாமன்-மச்சான் கூட்டணி… தவெக விஜய்யும் தான்… அண்ணாமலை அழைப்பு..!

திருப்பூர்: திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் இனிமேல் நாங்கள் பங்காளிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும், எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை பெருமையாக கருதுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூரில் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்தவருமான N.S.பழனிசாமி மணிமண்டபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பழனிசாமியின் குடும்பத்தினர், பாஜகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தமிழக மக்கள் பாஜகவை மிகவும் விரும்பி வருகின்றனர். தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் இனிமேல் நாங்கள் பங்காளிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை.

2024இல் பாஜக கூட்டணி மக்களின் முன்பாக மிக அற்புதமாக நின்றது. 2026 தேர்தலிலும் கூட்டாட்சி தான் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். பங்காளிகள் எங்களுக்கு வேண்டாம் பங்காளி என சொல்வதைவிட எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி. பங்காளிகள் என்பவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாமன் மச்சானாக இருக்க முடியும். அப்படி பார்க்கும்போது எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி.

அக்கா, தங்கை, மாமன், மச்சான் என எல்லோரும் இணைந்து தமிழகத்தை வலுப்படுத்தவே தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறது. மாமன் மச்சான் கூட்டணி என்னும் போது வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது. அதில் ஜாதி மதம் இனம் என எதற்குமே இடம் கிடையாது. எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம். அது விஜய்யாக இருந்தாலும் சரி. எல்லோருமே மாமன் மச்சான் தான்.

2026 தேர்தலை இந்த அரசியல் களத்தை இந்த மாமன் மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுகவை அழிப்பேன் என்றும் கருணாநிதியை விமர்சித்தும் பேசிய அண்ணாமலை அவர் நினைவிடம் சென்று கும்பிட்டு வந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்திருக்கிறார்.

ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி சித்தாந்த ரீதியாக திமுக பாஜகவுக்கு வித்தியாசம் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக ஒரு விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போடுவதை பெருமையாக பார்க்கிறேன். முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் உடன் கலைஞர் கூட்டணி அமைத்திருந்தார். பாஜக பற்றி தவறாக தமிழகத்தில் பரப்பப்படுவதாக கருணாநிதியே கூறியிருக்கிறார். என் வயதை விட அவரது அரசியல் அனுபவம் அதிகம்.

கருத்து வேறுபாடுகளை நான் நிறைய வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவரது நூறாவது ஆண்டில் அவருக்கு மரியாதை செய்வதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களின் நினைவிடத்திற்கும் சென்றிருக்கிறேன். அதேபோல எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கும் செல்வேன். தமிழகத்திற்கு பணியாற்றியவர்களை பார்க்க கூடாது என சொல்லக்கூடாது. நான் யார் காலிலும் விழவில்லை. மூன்றடி தள்ளி நிற்கவில்லை. கம்பீரமாக நிமிர்ந்து முதுகெலும்பு வலையாமல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றார்..