அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்ததால் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை அங்கீகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தேர்தல் ஆணைய ஆணையத்திற்கு மீண்டும் இரண்டாவது முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலையுடன் கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இரட்டை இலை ஒதுக்கி கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதேபோன்று இரட்டை இலை சின்னம், பொதுக்குழு தீர்மானங்கள், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது உட்பட அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள் மற்றும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து உங்கள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து நிர்வாக மாற்றம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என இபிஎஸ் அனுப்பிய கடிதம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..