வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா – ஐரோப்பா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று சந்தித்தார்.
அப்போது அவரை டொனால்ட் டிரம்ப் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, நம் நாட்டு பிரதமர் மோடி ஆகியோருக்கு டிரம்ப் கொடுத்தது போல் மரியாதை கொடுக்காமல் அவமதித்ததாக வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.
ஐரோப்பா நாடுகளில் ஒன்றாக உக்ரைன் உள்ளது. ரஷ்யாவுடன் எல்லையை உக்ரைன் பகிர்ந்து வருகிறது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இருந்த பஞ்சாயத்து போராக மாறியது. ரஷ்யாவின் மிரட்டலுக்கு பணியாமல் இருக்க உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது. இதனால் கொந்தளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக விளாடிமிர் புதினுடன்,டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
அதன்பிறகு சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் உள்ளன. ஏனென்றால் நேட்டோவில் அமெரிக்காவுடன் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்பெயின், ஸ்வீடன், துருக்கி உள்பட பல நாடுகள் உள்ளன. இருப்பினும் உக்ரைன் மீதான போர் நிறுத்த நடவடிக்கை தொடர்பாக ரஷ்யா உடனான பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா அழைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் உக்ரைனை கூட அமெரிக்கா அழைக்கவில்லை. இதனால் அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இருவரும் உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் போர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது உக்ரைன் விவகாரத்தில் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி நேற்றைய தினம் டொனால்ட் டிரம்ப், இமானுவேல் மேக்ரானுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு இமானுவேல் மேக்ரானும், டொனால்ட் டிரம்புடன் அவ்வளவு நெருக்கம் காட்டவில்லை என்று வீடியோக்களை சுட்டிக்காட்டி கூறுகின்றனர். டொனால்ட் டிரம்ப் முதல் முதலாக அமெரிக்க அதிபராக இருந்தபோது இமானுவேல் மேக்ரானும் அவரும் சந்தித்தனர். அப்போது இருவரும் 20 வினாடிகளுக்கு மேலாக தொடர்ந்து சிரித்த முகத்துடன் கைக்குலுக்கினர்.
ஆனால் நேற்றைய தினம் அதிபர் மாளிகையில் இமானுவேல் மேக்ரானை டொனால்ட் டிரம்ப் வரவேற்றார். இருவரும் 13 வினாடிகள் மட்டுமே கைக்குலுக்கினர். அதோடு இருவரின் முகத்திலும் போலியான புன்னகை இருந்ததாக பலரும் வீடியோ வெளியிட்டு கூறி வருகின்றனர். அதேபோல் வெள்ளை மாளிகைக்கு செல்லும் தலைவர்கள் பதிவேட்டில் கையெழுத்திடுவார்கள்.
அதன்படி சமீபத்தில் டொனால்ட் டிரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நம் நாட்டு பிரதமர் மோடி ஆகியோரும் இந்த பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பெஞ்சமின் நெதன்யாகு, மோடி ஆகியோர் கையெழுத்திடும்போது டொனால்ட் டிரம்ப் அவர்கள் அமரும் வகையில் இருக்கையை நகர்த்தி கொடுத்து அவர்களின் பின்னால் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
ஆனால் நேற்றைய தினம் இமானுவேல் மேக்ரான் அந்த பதிவேட்டில் கையெழுத்திட சென்றார். அப்போது முன்னால் சென்ற டொனால்ட் டிரம்ப் இருக்கையை சுட்டிக்காட்டி ”இதுதான் இருக்கை.. உட்கார்ந்து கையெழுத்து போடு” என்பது போல் சைகை காட்டினார். நெதன்யாகு, மோடிக்கு செய்தது போல் அவர் இருக்கையை நகர்த்தி கொடுக்கவில்லை. இமானுவேல் மேக்ரானே இருக்கையை நகர்த்தி அமர்ந்தார். அதேபோல் இமானுவேல் மேக்ரானின் பின்னால் நிற்பதற்கு பதில் ஒருபக்கமாக டொனால்ட் டிரம்ப் நின்றார்.
இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அவமதித்ததாக பலரும் வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி உக்ரைன் போர் விவகாரத்தில் நீண்ட கால நட்பாக இருக்கும் அமெரிக்கா – பிரான்ஸ் மட்டுமின்றி அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.