குறை சொல்றவங்க சொல்லிட்டே தான் இருப்பாங்க… பொது மக்கள் அங்கீகரிப்பார்கள்… சென்னை மேயர் பேட்டி..!

சென்னை: சென்னையில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள் என்றும், அரசின் துரித நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மேலும், குறை சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்களைத்தான் பொதுமக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வந்தது. இதனால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை ஓய்ந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்துள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னை மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இருந்தாலும், இன்று காலையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கவில்லை. இரவு முழுவதும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்தார். முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியபடி பணிகளை செய்தோம். துணை முதல்வர் உதயநிதி, சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

முக்கியமான சாலைகளில் எல்லாம் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சென்று வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் நன்றாகவே கைகொடுத்துள்ளது. சென்னையில் பொதுவாக 20 செ.மீ ஒரே நாளில் பெய்தால் அது கிட்டத்தட்ட வடிய ஒரு வார காலம் ஆகும். ஆனால், இப்போது ஒரே இரவில் மழைநீர் அகற்றப்பட்டு, இயல்பு நிலை வந்துள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தால் அதுவும் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வடிகால் மூலமாக வடிந்து வெளியேறிவிடும்.

கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி வருகிறோம். இன்று காலை கிச்சடி, பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்குவதற்காக மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

குறை சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்களைத்தான் பொதுமக்கள் அங்கீகரிப்பார்கள். அரசு துரிதமாகச் செயல்பட்டுள்ளது என்றும் பல பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றப்பட்டுள்ளது என பொதுமக்களே தெரிவித்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.