உலகம் முழுவதும் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டாலும், முன்பிருந்த அளவுக்கு இல்லாமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிவிட்டனர்.
இப்படியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று முதலில் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கயிருக்கிறது.
சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் கூட இந்த பி.எஃப்-7 கொரோனா வைரஸால் 4 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் முன்பு அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி தலைமையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் டெல்லியில் இன்று உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் முன்னெச்சரிக்கையாக அனைவரும் முகக் கவசம் அணியுமாறும், 2020, 2021-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்துகிறார் . அதேபோல், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கை, பரிசோதனை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கையிருப்பு, வென்டிலேட்டர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.