கோவையில்  போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற மூவர் கைது: 300 மாத்திரைகள் பறிமுதல்

கோவையில்  போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற மூவர் கைது: 300 மாத்திரைகள் பறிமுதல்.

கோவை மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, போதை பொருட்களை விற்பனை செய்வோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம் ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் பெ.நா.பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அதில் பயணித்த மூவர், போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவற்றை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று நபர்களையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் கணுவாய் பகுதியை சேர்ந்த அசார் என்ற அசாருதீன் (24), இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த சகாய விஜய்(26) மற்றும் வடவள்ளி பகுதியை சேர்ந்த கோகுல் (24) என்று தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, போதை ஏற்படுத்த கூடிய 300 வலி நிவாரண மாத்திரைகள், அவற்றை உடலில் ஏற்ற பயன்படுத்தும் ஊசிகள், 525 கிராம் கஞ்சா, இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.