திருச்சியில் இருந்து சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய பெட்டிகள் – பயணிகள் பீதி.!!

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தடைந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்போது திடீரென மூன்று பெட்டிகள் கழன்று ஓடின இந்த ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 22 பெட்டிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணிக்கு சென்னை புறப்பட்ட இந்த ரயில், திருச்சிக்கு நேற்று அதிகாலை 1.25 மணிக்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் ரயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு பெட்டியான எஸ்2- எஸ்1 இடையே இருந்த இணைப்பு சங்கிலி திடீரென அறுந்தது.
இதனால் எஸ்1 பெட்டி மற்றும் அதன்பின் இருந்த 2 முன்பதிவில்லா பெட்டிகள் எதிர்பாராத விதமாக நடுவழியில் கழன்று நின்றது. ரயில் சிறிது தூரம் மற்ற பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பெட்டிகளை விட்டு கிழே இறங்கினர். கார்டு கொடுத்த தகவலின் பேரில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பொன்மலை பணிமனையிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து ரயில் பெட்டியை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னை சென்ற பயணிகள் ரயிலில் மூன்று பெட்டிகள் கழன்று கொண்டு போனது பயணிகளிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.