திருச்செந்தூர் கடலுக்கு அடியில் மிக நீண்ட பழமையான சுவர்… கடல் நீர் உள்வாங்கியதால் கண்டுபிடிப்பு ..!

திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
 நேற்று பௌர்ணமி தினம் என்பதால் கடல் திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பாறைகள் மற்றும் பாசிகள் தெரிந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அதன் பின்னர் மீண்டும் கடல் நீர் சில அடி தூரம் உள் வாங்கியதை அடுத்து இந்த சுவர் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுவரை ஆய்வு செய்தால் பழங்கால தமிழர்களின் சில முக்கிய விஷயங்கள் தெரியவரும் என்பதால் தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். திருச்செந்தூருக்கு அப்பாலும் நகரங்கள் இருந்ததா? அந்த நகரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்களா? அங்கு என்ன நடந்தது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.