தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொண்ட திருச்செந்தூர் தெய்வானை யானை…!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இந்த கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 30 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியில் தினமும் இந்த தெய்வானை யானை குளித்து மகிழும். இந்த நிலையில் தான் கடந்த மாதம் 18 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் கடந்த 18 ஆம் தேதி முதல் தெய்வானை யானை வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட 5 குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வந்தது. அதன்பிறகு மருத்துவர்கள் யானை முழுதாக குணமடைந்து இருக்கிறது என்று கூறினர். இதையடுத்து அங்கு கண்காணிப்பில் இருந்த மருத்துவர்கள் கிளம்பினர். மேலும் அவ்வப்போது வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் யானை தற்போது சகஜ நிலையில் இருந்து வருகிறது. பாகன் இறந்ததை யானை மறப்பதற்காக யானை கட்டப்பட்டிருந்த அறையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது யானை கட்டப்பட்டுள்ள வளாகத்தின் அருகிலேயே அழைத்து வரப்பட்டு இயற்கை சூழலை அனுபவித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கு பிறகு யானையை மீண்டும் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். அதேசமயம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் யானை தெய்வானைக்கு காலில் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கோவில் வளாகத்திற்கு வந்த யானை தெய்வானை அங்குள்ள வேப்ப மர இலைகளை பறித்து அதை வைத்து தனது காலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி தனக்குத்தானே வைத்தியம் பார்த்தது. யானையின் இந்த செயலை மக்கள் வியந்து பார்த்தனர்.