கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்துள்ளார். அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் பெங்களூரை சேர்ந்த டாக்டர் தாமஸ் அரோன் பெனா (45) என்பவர் ரூ.6.2 கோடிக்கு உங்களது சிறுநீரகத்தை பெற்று கொள்கிறோம். ஆனால் அறுவை சிகிச்சை கட்டணமான ரூ. 4 லட்சத்து 14ஆயிரத்து 269-யை முன்கூட்டியே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நீங்கள் கட்டிய பணத்துடன் ரூ.6.2 கோடி உங்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதன்பிறகு தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக திரட்டி டாக்டரின் வங்கி கணக்கில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,14,269யை செலுத்தி உள்ளார். இந்த தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் கிட்னி தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கொடுத்த பணத்தை திருப்பி வாங்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் தனது முடிவை மாற்றிகொண்ட அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது டாக்டர் தாமஸ் அரோன் பெனா கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்னி தானமாக பெற்றுகொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.