பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: நெல்லை குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு..!

நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரான சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 23ம் தேதி விசாரணைக்காக கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ், லட்சுமிசங்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரையும் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையல் விசாரிக்கும்போது பல் பிடுங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சுபாஷ் அளித்த புகாரில்; நான், எனது நண்பர் வெங்கடேஷ் மற்றும் லட்சுமிசங்கர் ஆகிய மூவரையும் விசாரணைக்காக அழைத்த சென்றபோது ஏஎஸ்பி-யும் உடன் வந்து கட்டிங் பிளேயர் வைத்து 3 பற்கள் பிடுங்கப்பட்டது, அப்போது அதிகளவில் ரத்தம் வெளியேறியது என பாதிக்கப்பட்ட சுபாஷ் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளதாவது; ‘பலரும் துணிந்து புகார் அளிக்க முன்வருவதால் நானும் துணிந்து புகார் அளிக்க முன் வந்தேன். எனக்கு ஏஎஸ்பி பல்வீர்சிங் பிடுங்கிய 3 பற்களை ஒட்டி அதன் காரணமாக ஆடிக் கொண்டிருந்த ஒரு பல்லையும் டாக்டர் பிடுங்கி விட்டார். மேலும் எனக்கு 14 பற்கள் பிடுங்கி நடப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். என்னையும், என் நண்பர்களையும் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்து எங்களைக் கொலை செய்ய முயன்றதோடு, நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமானதாகும்.

தற்போது புகார் அளிக்கக்கூடாது என்று போலீசார் என்னை மிரட்டி வருகிறார்கள். போலீசாரால் என் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. ஆகையால் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள், என் மீது கருணைகூர்ந்து எங்களைப் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்து, கொலை செய்ய முற்பட்ட மேற்படி ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புத் தந்து நீதி வழங்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்’ என பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார்.