பல் பிடுங்கிய விவகாரம்… ஏப்ரல் 10ம் தேதி வரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்- விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் அறிவிப்பு..!

நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் ஏ எஸ் பி யாக பணியாற்றிய பல்பீர் சிங் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல் நிலையம் வந்த நபர்களை அடித்து உதைத்து பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் இதனை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் கடந்த திங்கட்கிழமை முதல் விசாரணை நடத்தி வருகிறார்.

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நடந்த அத்துமீறல் தொடர்பான சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்களுக்கு சமம் அனுப்பப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்மன் அனுப்பப்படாத சூர்யா என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சில காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

புதன்கிழமை வி.கேபுரத்தில் நடந்த பல் பிடுங்கி சம்பவம் தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வந்த ஆறு நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சேரன்மகாதேவியில் உள்ள சார்  ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதிக்குள் ஆஜராகி காலை 11 மணிககு மேல் மாலை 5 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் எழுத்துப்பூர்வமான புகாரை தெரிவிக்கலாம் என பத்திரிக்கை செய்தியை சார் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் வெளிப்படையான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக வந்து ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கங்களை அளிக்கலாம். தற்போது வரை நான்கு நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு சிலருக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர். எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதிக்குள் அலுவலக நாட்களில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என தகவல் தெரிவித்தார்.

மேலும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண் மற்றும் ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், அது தொடர்பான கோப்புகள் சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடித்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்தார்..