அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம், கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.