விநாயகர் சிலை கரைக்க சென்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலியான சோகம் – ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவலம்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மேல்புழுதியூர் ஏரியில் கரைக்க சென்ற போது சதீஷ் என்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்கிரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று மேல் புழுதியூர் ஏரியில் கரைக்க எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ராஜ் (எ) சதீஷ் கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் ஏரியில் இருந்து உடலை மீட்டுள்ளனர். குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். சதீஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..