கடனை அடைக்க தன் சிறுநீரகத்தை விற்க ஆன்லைனில் முயன்ற நர்சிங் மாணவிக்கு நடந்த சோகம் ..!

தராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வருபவர் சுனந்தா ராவ். இவரின் சொந்த ஊர் குண்டூர். இவர் தன் கடனை அடைப்பதற்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக அவர் ஆன்லைனில் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆன்லைனில் பிரவீன் ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரவீன் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவரிடம் ரூ.16 லட்சத்தை சுனந்தா இழந்திருக்கிறார். இது குறித்து அந்தப் பெண் போலீஸில் கொடுத்திருக்கும் புகாரில், “சிறுநீரகத்துக்கு ரூ.3 கோடி கொடுப்பதாக ஆன்லைனில் பழகிய பிரவின் என்பவர் தெரிவித்தார்.

அதோடு ஆபரேசனுக்கு முன்பு பாதித்தொகையை கொடுத்துவிடுவதாகவும், ஆபரேசன் முடிந்த பிறகு பாக்கி தொகையை கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். சென்னையில் உள்ள சிட்டி பேங்க்கில் ஒரு கணக்கு தொடங்கி அதில் ரூ.3 கோடியை டிரான்ஸ்பர் செய்தார். இந்த பணத்தை பெறவேண்டுமானால் சரிபார்ப்பு கட்டணம், வரி என்று சொல்லி ரூ.16 லட்சத்தை செலுத்தும்படி பிரவீன் கேட்டுக்கொண்டார். நானும் 3 கோடி ரூபாய் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில் ரூ.16 லட்சத்தை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கில் செலுத்தினேன். ஆனால் பணம் செலுத்திய பிறகும் ரூ.3 கோடி கிடைக்கவில்லை.

இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டேன். பணம் வேண்டுமானால் டெல்லியில் வந்து வாங்கிக்கொள்ளும்படி ஒரு முகவரியை கொடுத்தார். டெல்லியில் சென்று பார்த்த போது அது போலி முகவரி என்று தெரிய வந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவை பெற்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுனந்தா தன் தந்தையின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பிரவீனுக்கு ரூ.16 லட்சத்தை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே வீட்டிற்கு வரும்படி சுனந்தாவிடம் அவரின் தந்தை கேட்டுக்கொண்டார். இதனால் ஐதராபாத் விடுதியில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார். போலீஸார் விசாரணை நடத்தி அவர் தன் தோழியின் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர்.