திருச்சி கல்குவாரி உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டல் – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது..!

திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி இணை செயலாளரான அருண்குமார், மேற்கு தொகுதி செயலாளரான செல்லத்துரை, நாம் தமிழர் கட்சி உறுப்பினரான ராஜாங்கம் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி டிஎஸ்கே கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு இருந்த தங்கவேலிடம் உரிய அனுமதியின்றி கல்குவாரி நடந்து வருவதாகவும், எனவே இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது, தொடர்ந்து பணம் தர முடியாது என தங்கவேல் கூறியுள்ளார். இதனையடுத்து அருண்குமார், செல்லத்துறை, ராஜாங்கம் உள்ளிட்ட ஏழு பேர் அக்டோபர் 4ஆம் தேதி கல்குவாரிக்கு நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் கரிகாலன் வலையொலி என்ற யூட்யூப் சேனலில் திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டியில் அரசு அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வருகிறது.
இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து தங்கவேல், புலிவலம் காவல் நிலையத்தில் அக்டோபர் 13ஆம் தேதி புகார் அளித்துள்ளார்/ இதையடுத்து வழக்கு பதிவு செய்த புலிவலம் காவல் நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருண்குமார், செல்லத்துரை, ராஜாங்கம், மற்றும் ஆனந்தன்,தனபால், வினோத், கேமராமேன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் செல்லத்துரை ராஜங்கம் ஆகியோரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நாம் தமிழர் நிர்வாகி அருண்குமார், ஆண்டன், வினோத், கேமரா மேன் ஆகியவரை தேடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் கல்குவாரி உரிமையாளரை மிரட்டியது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது