திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகர மேயர் திடீர் ஆய்வு.!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா் தூய்மையாகப் பராமரிக்கவும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதே  சமயம் அங்கு நடைபாதைகளில் குப்பைகள் கொட்டியிருப்பதைக் கண்ட மேயா் குப்பைகள் கொட்டியவா்கள் மீதான நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து அங்கு குப்பைகளை கொட்டிய கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பேருந்து நிலையப் பகுதியைத் தூய்மையாக பராமரிக்கவும் தவறுவோருக்கு அபராதம் விதிக்கவும் அறிவுரை வழங்கினாா்.
செயற்பொறியாளா் செல்வராஜ் உதவி ஆணையா் ஜெயபாரதி உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி மதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் சுகாதார ஆய்வாளா்கள் உடனிருந்தனா். சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைக்காரர்கள் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைப்பது இல்லை டீ கப் முதல் ஜூஸ் பாட்டில் முதல் எல்லாமே ரோட்டில் சிதறி கிடக்கின்றன இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தால் தான் சத்திரம் பேருந்து நிலையம் தூய்மையாக இருக்கும் என்றனர்