அதிமுகவில் இணைகிறாரா திருச்சி எம்பி திருநாவுக்கரசர்..?

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை எம்.பி. யாக இருந்த திருநாவுக்கரசர் மீண்டும் தனக்கு திருச்சி தொகுதியை கேட்டு கடுமையாக முயற்சித்தார். ஆனால் இந்த தேர்தலில் திருச்சி தொகுதியை கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு கொடுத்து விட்டது திமுக தலைமை.
திருச்சி இல்லையென்று ஆனதும், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் ஒன்றையாவது தனக்கு தருமாறு திருநாவுக்கரசர் பலத்த முயற்சி செய்தும் அதற்கு பலன் இல்லை.
இந்த நிலையில் தனக்கு மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும் தனக்கு சீட் மீண்டும் கிடைத்து விடக்கூடாது என்று முயன்றவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார் திருநாவுக்கரசர்.
இந்த பின்னணியில்தான் திருநாவுக்கரசரை அதிமுகவுக்கு இழுக்க அவரது சம்பந்தியும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான இசக்கி சுப்பையா முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இதுபற்றி விசாரித்த போது, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் முக்கியமான தலைவராக இருந்தவர் திருநாவுக்கரசர். அதிமுகவின் இரு பெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் பணியாற்றியவர். ஜெயலலிதா காலத்தில் அவருக்கு எதிராக செயல்பட வேண்டிய சூழலில் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சி ஆரம்பித்து எட்டு எம்பிக்களுக்கு தலைமை தாங்கியவர். ஆனால் அவருக்கு இப்போது ஒரு எம்பி சீட் கொடுக்கக்கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது.
அது மட்டுமல்ல திருநாவுக்கரசர் மகன் எஸ். டி. ராமச்சந்திரன் இப்போது அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் திருநாவுக்கரசரின் சம்பந்தியான அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நீங்கள் இருக்க வேண்டிய இடம் அதிமுக தான் என்று சொல்லி திருநாவுக்கரசரை அழைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார்.
அதிமுக முக்குலத்தோருக்கு எதிரான கட்சி என்று சித்திரிக்கப்படும் இந்த அரசியல் சூழலில் திருநாவுக்கரசர் போன்ற முக்குலத்து சமுதாயத்தின் வலிமையான முகம் அதிமுகவுக்கு தேவை என்று திருநாவுக்கரசரை அதிமுகவில் இணைப்பது பற்றி எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இசக்கி சுப்பையா” என்கிறார்கள்.
இதுகுறித்து திருச்சி காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது. திருநாவுக்கரசர் இப்போது வரை காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். அதேபோல தான் எம்.பி. யாக இருந்த 5 வருடத்தில் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டது குறித்து எழுதப்பட்ட புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் நல்லது கெட்டதுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. வடமாநிலங்களில் கூட பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிமுக தோல்வியடையும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக உட்கட்சிக் கலகம் வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 1980 களில் இருந்து ஆக்டிவ் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநாவுக்கரசருக்கு இதெல்லாம் தெரியாதது அல்ல. எனவே அவருக்கு காங்கிரஸ் கட்சியோடு கோபங்கள் வருத்தங்கள் இருந்தாலும் இப்போதைய தேசிய- மாநில அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜூன் 4-ம் தேதிக்கு பிறகுதான் எந்த முடிவையும் எடுப்பார்” என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். இதை உறுதிப்படுத்துவது போல மே 6 ஆம் தேதி புதுக்கோட்டையில் தண்ணீர் பந்தல் திறப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் தனது தணியாத தாகத்தை பற்றி வெளிப்படையாகவே பேசினார்.
சிறப்பாக செயல்பட்ட எம்பி.க்களில் எனக்கு முதலிடம் கொடுத்து ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது. அந்த பத்திரிகை பொதுவாகவே எங்களுக்கு எதிராக எழுதும் பத்திரிகைதான். அப்படிப்பட்ட பத்திரிகையிலே கூட எனது எம்பி பணியை மக்கள் பாராட்டுவதாக சர்வே வெளியிட்டிருந்தார்கள். இப்படி சிறப்பாக எம்பி பணி செய்துவிட்டு, மீண்டும் சீட் கிடைக்கவில்லை என்றால் சந்தோஷமாகவா இருக்கும்? வருத்தமாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என பல கட்சிகளில் இருந்தும் என் நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் விசாரித்தார்கள். வெளி மாநில நண்பர்கள் கூட போன் போட்டு எனக்கு சீட் கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்கள். புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட விசாரித்தார். அவர் போல இன்னும் பலரும் விசாரித்தார்கள். அவர்கள் அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் நான் என் கருத்தை சொல்லியிருக்கிறேன். தேர்தல் முடிந்துவிட்டது. இனி வாக்கு எண்ணுவதுதான் பாக்கி. இப்போது இதுகுறித்து பேசி பயனில்லை என்று பேசியிருக்கிறார் திருநாவுக்கரசர். ஆனாலும் திருநாவுக்கரசரின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருநாவுக்கரசர் எம்பி மீண்டும் தன் தாய் கழகமான அதிமுகவில் சேருவாரா என்பது ஜூன் நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தெரியவரும்..