திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர், சரக்கு முனையத்திற்கு அண்ணாவின் பெயர் சூட்டப்படும்- மேயர் அறிவிப்பு..!

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு வாா்டுகளிலும் மழைநீா் தேங்கும் இடங்களில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகளை பழுது நீக்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் தீபாவளி போனஸ் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். குடி நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பொதுமக்களுக்கென பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவா்), மாமன்ற உறுப்பினா்கள் கோ.கு.அம்பிகாபதி (அதிமுக), ஜாபா் அலி (திமுக), சுரேஷ் (மாா்க்சிஸ்ட் கம்யூ), சுரேஷ் (இந்திய கம்யூ), முத்துசெல்வம் (திமுக), அப்பீஸ் முத்து குமாா் (மதிமுக), ஜவகா் ( காங்கிரஸ்), எல்.ரெக்ஸ் (காங்.) உள்ளிட்டோா் விவாதித்தனா். கூட்டத்தில் மொத்தம் 99 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினா்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது : மாநகரில் கனமழை பெய்த போதிலும் மாநகரில் எந்த சாலையிலும் தண்ணீா் தேங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 4 கோடி செலவில் 451 கி. மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டு உள்ளது. மேலும் மாநகரில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கிறது.இதற்கு காரணம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுப்பது மட்டுமல்லாமல் துப்புரவுப் பணியாளா்கள் நல்ல முறையில் பணியாற்றி வருவதால் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. இதற்காக ஊழியா்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் பாராட்டுகள். பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயா் வைப்பது என்றும், மேலும் கனரக சரக்கு வாகன முனையத்துக்கு பேரறிஞா் அண்ணா பெயா் வைப்பது எனவும் மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் பாலு, நகரப்பொறியாளா் சிவபாதம், மண்டலத் தலைவா்கள் ஆண்டாள் ராம்குமாா், மதிவாணன், துா்கா தேவி, ஜெய நிா்மலா, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி அரவிந்தன் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு எம்ஜிஆர்ரின் பெயரை சூட்ட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்..