ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மதுபானங்கள் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பு.புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சத்தியமங்கலம் – கோவை சாலையில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த அட்டை பெட்டிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்த போது ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (45), கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (36), என்பதும், இவர்கள் இருவரும் அன்னூரில் நடத்திவரும் ரெஸ்டாரண்டுக்கு டாஸ்மாக் மதுபானங்களை வாங்கிச் சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோ மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் 180 மில்லி லிட்டர் அளவுள்ள 1056 பாட்டில்களும், 375 மில்லி லிட்டர் அளவுள்ள 96 பாட்டில்களும், 650 மில்லி லிட்டர் அளவுள்ள 60 பீர் பாட்டில்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்..