விடுதி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இருவர் கோவையில் கைது
கோவை,
கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான பெண்கள் இந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சுகிர்தா பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹாஸ்டல் உரிமையாளர் தனது சொந்த வேலைக்காக ஹாஸ்டல்களின் முழு பொறுப்பையும் சுகிர்தாவிடம் ஒப்படைத்து இருந்தார் . இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரானா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது .அந்த சமயத்தில் ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்கள் தங்களது உடைமைகளை அறையிலேயே வைத்துவிட்டு சாவிகளை விடுதி ஹாஸ்டலில் அலுவலக அறையில் வைத்துவிட்டு சென்றனர் .அலுவலகத்தில் பணிபுரிந்த சுகிர்தாவும் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்காமல் ஊருக்கு சென்று விட்டார். 2020 ஆம் ஆண்டு மே மாதம் சுகிர்தா ஹாஸ்டல் உரிமையாளரிடம் செல்போன் மூலம் அழைத்துப் பேசி தன்னை தனது கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்துவதாகவும் தனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்றும் தங்குமிடமும் உணவு கொடுத்தால் போதும் என மீண்டும் வேலை கேட்டுள்ளார் .இதை நம்பிய ஹாஸ்டல் உரிமையாளர் 8 விடுதிகளின் மொத்த பொறுப்பை சாவிகளுடன் ஒப்படைத்தார் .2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தவிர்க்கப்பட்டு பெண்கள் ஹாஸ்டலில் மீண்டும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் உரிமையாளர் ஏற்கனவே உள்ள வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்கும்படி சுகிர்தாவிடம் கூறி காலம் தாழ்த்தி வந்தார். அதன் பிறகு சுகிர்தா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அவரது சித்தி இறந்து விட்டதாக ஊருக்கு செல்வதாகவும் ஊருக்கு சென்று மீண்டும் வரும்பொழுது அனைத்து வரவு செலவு கணக்கு கூறிவிட்டு சென்றார். தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹாஸ்டல் உரிமையாளர் ஒரு விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்வதற்காக திறந்து பார்த்த போது பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் தங்கி இருந்த பெண்கள் விட்டுச் சென்ற உடைமைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது. சுகிர்தாவை ஹாஸ்டல் உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பை துண்டித்து வந்துள்ளார் .சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் ஹாஸ்டல் உரிமையாளருக்கு செல்போன் மூலம் அழைத்து ஹாஸ்டலின் வரவு செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார் .இதை தொடர்ந்து ஹாஸ்டல் உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்ப படிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஹாஸ்டல் உரிமையாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஹாஸ்டல் உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து கட்டணம் அதிகம் பெற்றுள்ளதும் பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா
கட்டணத்தை முழுமையாக பெற்று கையாடல் செய்தது தெரியவந்தது. அதன் பிறகு சிசிடிவி டிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிலிருந்து காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தெரிய வந்தது. விடுதியில் கட்டண ரசீது புத்தகங்களையும் திருடி சென்றதும் ஹாஸ்டலில் தங்கி இருந்த பெண்கள் கட்டணமாக செலுத்திய தொகையை அவருடைய தனிப்பட்ட ஜி பே எண்ணிற்கு வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் சுகிர்தாவின் கள்ளகாதலர்கள் பிரபு மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் ஜி பே கணக்குகள் மூலம் 31 லட்சம் ரூபாய்க்கு மேல் ஹாஸ்டல் கட்டணத்தை பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஹாஸ்டல் உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார் .போலீசார் கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் பிரபு ,ஜெயகுமார் மூவரையும் தேடி வந்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனி படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று ஒதுங்கி இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுகிர்தா குறித்த திருக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகிர்தாவுக்கு ஏற்கனவே திருநெல்வேலியை சேர்ந்த வெள்ளை துரை என்பவருடன் திருமணம் நடைபெற்றது . திருமணத்திற்கு பிறகு சுகிர்தா தனது கணவருடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார் .அப்போது அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரபுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வெள்ளைத்துரை காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் வியாபார விஷயமாக வெளியில் செல்லும் சமயங்களில் சுகிரதாவும் பிரபுவும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர் . சுகிர்தா கணவன் வீட்டிலிருந்த ஐந்து லட்ச ரூபாய் பணம் 13 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் புறப்பட்டார். ஐந்து வயது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார் .பின்னர் 5 வயது மகனை எதற்கு அழைத்து வந்தாய் என கள்ளக்காதலன் பிரபு கேட்கவே உடனே ஐந்து வயது மகன் சட்டை பாக்கெட்டில் கணவரின் பெயர் மற்றும் முகவரியை எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சுகிர்தா தலைமறைவானார். இதுகுறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துடியலூர் போலீஸ் புகார் அளித்திருந்தார். கள்ளக்காதலனுடன் வெளியேறிய சுகிர்தா பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றிவிட்டு மீண்டும் கோவை சரவணம்பட்டி பகுதிக்கு வந்து ஹாஸ்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெயக்குமாருடனும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது . பின்னர் சுகிர்தா பணிபுரிந்த லேடிஸ் ஹாஸ்டலில் 31 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு கள்ளக்காதலர்களுடன் தலைமுறைவானார். ஹாஸ்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது அனைவரும் போலீசில் சிக்கி உள்ளனர். சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவுடன் சுகிர்தாவின் கணவர் வெள்ளைத்துரை மாநகர குற்றப்பிரிவில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.