கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு
கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவரும் பணியாற்றி வந்தனர். இவர்கள் காப்பகத்தில் உள்ள ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு அனுமதி சான்றிதழ் கொடுப்பதற்கு பெற்றோரிடம் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு திவ்யாவிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை கண்காணித்தனர் அப்பொழுது ரூபாய் 5 ஆயிரம் லஞ்ச பணத்தை குழந்தையின் பெற்றோரிடம் தனலட்சுமி கார்த்திக் பிரபு ஆகியோரிடம் கொடுத்தனர். அப்பொழுது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர். மேலும் அங்கு மூன்று மணி நேரம் சோதனை நடந்தது. பின்னர் பிடிபட்ட தனலட்சுமி, கார்த்திக் பிரபு ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.