விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர் மகன் ஜெய்ஷா பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி பேசியதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர், ஜெய்ஷாவின் பெயரை அமைச்சர் உதயநிதி “திரு.ஜெய்ஷா” என்று குறிப்பிட்டு மரியாதையுடனே பேசினார். அது தகாத வார்த்தை அல்ல என்பதால் அதை அவை குறிப்பை விட்டு நீக்கக்கூடாது என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக சட்ட மன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், அமித்ஷா மற்றும் அவரின் மகன் குறித்து அமைச்சர் உதயநிதி கேலியாகப் பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கிரிக்கெட் விளையாட்டிற்கான தமிழ்நாடு தலைவராக அசோக் சிகாமணி இருக்கிறார். அவர் பெயரை உதயநிதி ஏன் கூறவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து , பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், கோவை குடிநீர் பிரச்னை குறித்த அவரின் கவன ஈர்ப்பை பேரவையில் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி, அமித்ஷாவை பற்றி சட்டப்பேரவையில் பேசியது போல், இவர்களைக் குறித்து மற்ற மாநில சட்டமன்றத்தில் பேசினால் ஏற்றுக் கொள்வார்களா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, “தனது மகன் என்பதால் உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சரின் கண்ணில் தெரியவில்லை. உதயநிதி வளர வேண்டிய அமைச்சர், எனவே அவர் செய்யும் தவறை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் , நியாயப்படுத்தக் கூடாது ” என்றும் பேசியுள்ளார்..