முன்னாள் எம்எல்ஏவும் மஜக கட்சியின் தலைவருமான தமீமுன் அன்சாரி நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி மாத வாக்கில் திருச்சியில் போராட்டம் நடைபெறும் என்று தொண்டர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறது இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள அவர், தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் வகையில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திருச்சியில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளார். இதனிடையே மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கீழ் கண்ட முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து மஜக போராடி வருகிறது.கோவை சென்னையை தொடர்ந்து கடந்த ஜூன் முதல் நெல்லை, கடலூர் சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகளை முற்றுகையிட்டு பெருந்திரள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுசெப்டம்பர் 10, 2023 அன்று இதே கோரிக்கைக்காக தமிழக சட்டமன்றமும் முற்றுகையிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு அமைச்சரவை கூட்டி 161-வது சட்டப்பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எதிர்வரும் பிப்ரவரி 10 அன்று திருச்சி சிறைச்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என்றும், இது மனித உரிமைக்காக நடத்தப்படும் மாபெரும் எழுச்சிமிகு களமாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் முழுவதும் மஜகவினர் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திலும், டிசம்பர் மாதம் முழுக்க வெள்ள நிவாரண பணிகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது திருச்சி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சியில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்காக தேதி முடிவாகி களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.