வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் இந்தியில் உரையாற்றினார். அப்போது, கூட்டத்தில் திமுக சார்பில் பங்கெடுத்த மூத்த தலைவர் டி.ஆர்.பாலு நிதிஷ் குமாரின் உரையின் மொழிபெயர்ப்பைக் கோரினார்.
நிதிஷ் சொல்வதை புரிந்துகொள்ள முடியாததால், மறுபுறம் அமர்ந்திருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி., மனோஜ் கே. ஜாவிடம், அவரது பேச்சை மொழிபெயர்த்துக் கூறுமாறு சைகை காட்டினார் டி.ஆர்.பாலு. உடனே, மனோஜ் ஜா நிதீஷ் குமாரிடம் மொழிபெயர்க்க அனுமதி கேட்டார். இதைக் கேட்ட நிதிஷ் குமார் அமைதி இழந்து, “நாங்கள் எங்கள் நாட்டை இந்துஸ்தான் என்றும், இந்தி எங்கள் தேசிய மொழி என்றும் அழைக்கிறோம். இந்தி மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறி கொந்தளித்தார். மேலும், மனோஜ் ஜா தனது பேச்சை மொழிபெயர்க்க வேண்டாம் என்றும் நிதிஷ்குமார் கூறினார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் முன்னிலையில் நிதிஷ் குமார் இவ்வாறு பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் தலைவரான சத்குரு ட்விட்டரில் இது தொடர்பான செய்தி ஒன்றைப் பகிர்ந்து, நிதிஷ் குமாருக்குப் பதில் அளித்துள்ளார். அதில், “மதிப்பிற்குரிய ஶ்ரீ நிதீஷ் குமார் ஜி, ஹிந்துஸ்தான் என்றால் இமயமலைக்கும் இந்து சாகரத்துக்கும் (இந்தியப் பெருங்கடல்) நடுவில் உள்ள நிலம் அல்லது இந்துக்களின் நிலம். இந்தி மொழியின் நிலம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “மக்கள்தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்க வேண்டும் என்ற புரிதலுடன்தான் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“தங்கள் சொந்த மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட பல மாநிலங்கள் இருப்பதால் இதுபோன்ற சாதாரணமான கருத்துகளைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.