அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு..!

மெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், புதன்கிழமை (செப்டம்பர் 18) தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிரடியாக 0.50 சதவீதம் குறைத்துள்ளது.
இது கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், இது அமெரிக்க முதலீட்டுச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.வேலைவாய்ப்பு நிலைமை மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் மென்மையாகி வருவதால், பெடரல் ரிசர்வின் நாணய கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அல்லது 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க முடிவு செய்துள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தாக பார்க்கப்பட்டாலும், பெடரல் ரிசர்வ் மெல்ல மெல்ல வட்டியைக் குறைக்கும் என்றே கணிக்கப்பட்டதால் இந்த முறை 0.25 சதவீதமும், அடித்த முறை 0.50 சதவீதம் குறைக்கும் எனக் கணிப்புகள் இருந்தது, ஆனால் அதிரடியாக இந்த முறையே வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளது, பொருளாதார வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவசர வட்டி விகிதம் குறைக்கப்பட்டதைக் கணக்கில் சேர்க்காவிடில், பெடரல் ரிசர்வ் 2008 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தான் 0.50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு பென்சமார்க் வட்டி விகிதத்தைக் குறைந்தது. இதன் பின்பு தற்போது தான் வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது.இந்த 0.50 சதவீத வட்டி விகித குறைப்பின் மூலம், அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 4.75% – 5% வரம்பிற்குள் கொண்டு வரும். இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் செலவுகளைக் குறைக்கும், இதன் எதிரொலியாகத் தனிநபர் கடன்கள், கார் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல நுகர்வோர் கடன்களின் வட்டி விகிதமும் குறையும்.இந்த 0.50 சதவீத வட்டி விகித குறைப்பிற்கு பெடரல் ரிசர்வ்-ன் FOMC வாக்களிப்பு நடத்தியதில் 11-1 என்ற வாக்கெண்ணிக்கையால் நடைமுறைக்கு வந்துள்ளது, அதில் கவர்னர் மிஷெல் போமன் என்பவர் 0.25 சதவீதம் மட்டும் குறைத்தால் போதுமானது என விரும்பி இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெடரல் ரிசர்வ் 0.50 சதவீதம் அளவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் டாவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 220 புள்ளிகள் அல்லது 0.5% உயர்ந்தது. இதேபோல் S&P 500 குறியீடு 0.6% அதிகரித்தது. நாஸ்டாக் காம்போசிட் 0.9% உயர்ந்தது. மத்திய வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு 30-பங்கு டாவ் மற்றும் பல சந்தை குறியீடுகள் புதிய சாதனை உயர்வுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதன் தாக்கம் நாளை பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும்.பெடரல் ரிசர்வ்-ன் இந்த வட்டி விகித குறைப்பு மூலம் அதன் பென்ச்மார்க் வட்டி விகிதம் இரண்டு தசாப்தங்களில் உயர்வான 5.3% இலிருந்து தோராயமாக 4.8% ஆகக் குறைத்ததுள்ளது. அமெரிக்க அரசு நான்கு தசாப்தங்களில், இந்த வருடம் தான் பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடியது.பணவீக்க உயர்வு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9.1% உச்சத்தை எட்டியதிலிருந்து ஆகஸ்டில் மூன்று ஆண்டுகளில் குறைந்த 2.5% ஆகக் குறைந்துள்ளது, இது 2% இலக்கை விட அதிகமாக இல்லை என்பதாலும், தொடர்ந்து பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை கிடைத்த காரணத்தால் தற்போது பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.பெடரல் ரிசர்வ் அதிகாரிகள், இந்த ஆண்டு தங்கள் இறுதி இரு கூட்டங்களில், நவம்பர் மற்றும் டிசம்பரில் தங்கள் முக்கிய விகிதத்தைக் கூடுதலாக 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 2025 இல் நான்கு கூடுதல் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் 2026 இல் இரண்டு வட்டி குறைப்புகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர்