அமெரிக்க அதிபர் தேர்தல்… கமலா ஹாரிஸ் டிரம்ப் விவாதத்திற்கு பின் தலைகீழாக மாறிய மக்கள் ஆதரவு..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், இப்போது புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சொல்லி வைத்தார் போல அனைத்து சர்வே முடிவுகளும் ஒரே விஷயத்தைக் காட்டுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இரு தலைவர்களுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதம் ரொம்பவே முக்கியம். ஜோ பைடன்- டிரம்ப் இடையேயான விவாதத்திற்கு பிறகே பைடனுக்கு அழுத்தம் அதிகரித்து அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தான் டிரம்ப்- கமலா ஹாரிஸ் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே இந்த விவாதத்திற்குப் பிறகு இப்போது கள சூழல் எப்படி இருக்கிறது.. மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையிலான சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி ரேஸ் டூ ஒயிட் ஹவுஸ் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 49.4% வாக்களித்துள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு ஆதரவாக 46.9% மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 2.5% அதிகமாக இருக்கிறது.

அதேபோல தி ஹில் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 49.4% சதவிகிதம் பேரும் டிரம்பிற்கு ஆதரவாக 45.8% சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். அதாவது கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 3.6 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

270டூவின் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 48.1 சதவிகித வாக்குகளும், டிரம்பிற்கு 47.2 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பைத்ரடிஎய்ட் என்ற அமைப்பு நடத்திய சர்வேயிலும் கமலா ஹாரிஸ்- 47%, டிரம்ப் 44.3% வாக்குகள் பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. சில்வர் புல்லட்டின் சர்வேயில் கமலா ஹாரிஸ் 48.7% வாக்குகளையும் டிரம்ப் 46.7% வாக்குகளையும் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எல்லா சர்வேக்களிலும் கமலா ஹாரிஸு முன்னிலை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து கருத்துக்கணிப்புகளின் சராசரியைப் பார்க்கும் போது கமலா ஹாரிஸ் 48.2% வாக்குகளையும் டிரம்ப் 45.8% வாக்குகளையும் பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 2.4%ஆக உள்ளது.

மேலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் மாகாணங்கள் என சில மாகாணங்கள். ஒருவர் அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் ஸ்விங் மாகாணங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்த ஸ்விங் மாகாணங்களில் நடத்தப்பட்ட சர்வேக்களிலும் கமலா ஹாரிசுக்கு சாதகமான ஒரு சூழலே இருக்கிறது. இதை நிலை தேர்தல் வரை தொடர்ந்தால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையைக் கமலா ஹாரிஸ் நிச்சயம் படைப்பார்.