சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் இனங்களுக்கு காலி நில வரி (VACANT LAND TAX) நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான வரியினை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ள சுருக்கம் இதுதான்:
“மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்ற கிராம ஊராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை அப்பகுதியில் மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான செயல் திட்டங்களான நிறுவனங்கள், கட்டிடங்கள், வீட்டுமனை அபிவிருத்தி மற்றும் தனி வீடுகள், குடியிருப்பு திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிலவரி நடப்பு அரையாண்டு தவிர்த்து, முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான காலி நில வரியினை (VACANT LAND TAX) செலுத்த வேண்டுமென, கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் (நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் சுற்றறிக்கை எண் ந.க.எண்.4662/2024/மா.ந.அ-2 தேதி:21.02.2024 வாயிலாக) நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சுற்றறிக்கையை பிறப்பித்தது.
இத்தருணத்தில் புதியதாக நகர்புறங்களில் இணைக்கப்படும் ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னெடுக்கும் பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் சுற்றறிக்கை எண் ந.க.எண்.4662/2024/மா.ந.அ-2 அடிப்படையில் நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான காலி நில வரியினை கட்டாயம் செலுத்த வேண்டும் என நகர்புற அதிகாரிகள் கூறுகிறார்கள்..
மேலும் சமீபத்தில் தான் இந்த கிராம ஊராட்சிகள் புதியதாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நகர்புற அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளாமல் வரி வசூலிப்பதினை மட்டும் நோக்கமாகக் கொண்டு, அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான காலி நில வரியினை கட்டாயம் வசூலிக்கும் நோக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
ஆகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் அனைத்திற்கும், மேற்கூறிய நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்ட நாளினை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் காலி நில வரி (VLT) வசூலிப்பது என்பது நியாயமானதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.
அதைவிடுத்து அரசு வெளியிட்டுள்ள மேற்கண்ட சுற்றறிக்கையின்படி கட்டாயம் மேற்கண்ட 12 அரையாண்டு முன்னுள்ள வரியினை செலுத்த வேண்டும் என்கின்ற நகராட்சி நிர்வாகத்தின் செயலானது பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் மற்றும் மனக்குமுறலையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேற்கண்ட பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தாங்கள் கனிவுடன் பரிசீலித்து, மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு, தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும்” என பெயிரா தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.