வேன் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை – இரும்பு வியாபாரி கைது..!

கோவை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி ( வயது 56) வேன் டிரைவராக வேலை பார்த்தார் .இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் வாடிக்கையாளர் ஒருவரிடம் திருட்டுப் பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது .இதை வேன் டிரைவர் ரவி கண்டித்தார். அப்போது செல்வராஜ் நீ உனது வேலையை மட்டும் பார் என்று எச்சரித்துள்ளார்.இந்த நிலையில் நேற்று மதியம் டிரைவர் ரவி கடையில் இருந்த போது செல்வராஜ் திருட்டுப் பொருட்களை வாங்கினாராம். இதை ரவி மீண்டும் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரும்பு வியாபாரி செல்வராஜ் டிரைவர் ரவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். பின்பு ரவி கடைக்கு பின்புறம் ஓய்வெடுக்கும அறைக்கு சென்றார். ‘ஆத்திரம் அடங்காத செல்வராஜ் அங்கு சென்று ரவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதே இடத்தில் ரவி இறந்தார் . இதற்கிடையே வேலைக்கு சென்ற ரவி வீட்டுக்கு வராததால் அவருடைய மகன் நந்தகுமார் கடைக்கு சென்று பார்த்தபோது ரவி கொலை செய்யப்பட்டது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தலைமறைவான வியாபாரி செல்வராஜ் தேடி கைது செய்தனர்..