பெங்களூரு: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற வுள்ளது. அக்கோயிலின் கருவறையில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலைகளை வடித்தனர். இதில் சிறந்த சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இக்கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் ஒரு சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கே ராமர் இருக்கிறாரோ? அங்கே ஹனுமனும் இருப்பார். அயோத்தியில் ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலையை தேர்வு செய்யும் பணிகள் முடிந்துவிட்டன. நாட்டின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானது சரியானது” என்றார். எனினும், சிலை தேர்வு தொடர்பாக கோயில் அறக்கட்டளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
மோடியை கவர்ந்த சிற்பி: கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர். எம்பிஏ படித்துள்ள இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிற்ப கலை மீதான ஆர்வத்தின் காரணமாக பணியில் இருந்துவிலகி சிற்பங்களை உருவாக்கும் முயற்சியில்இறங்கினார். இவர் வடித்த சுபாஷ் சந்திரபோஸின் 30 அடி சிலை பிரதமர் மோடியைவெகுவாக கவர்ந்தது. அதனை பிரதமர் மோடிபாராட்டியதால், அதே சிலையை சிறிய அளவிலே செதுக்கி மோடிக்கு பரிசளித்தார். தற்போதுஅருண் யோகிராஜ் வடித்துள்ள குழந்தை ராமர் சிலை 51 அங்குல உயரம் கொண்டது.