தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு பரபரப்பான சூழலில் இன்று (ஏப்ரல் 25) காலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடங்க இருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்க இருக்கிறார்.அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதலமைச்சர் இருப்பதாக தி.மு.க அரசு கொண்டாடி வந்த சூழலில், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு இருப்பதாகவும் ஆளுநரே வேந்தராகத் தொடர்கிறார் எனவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
மேலும், மாநில அரசுடன் எந்தவித மோதல் போக்கும் கிடையாது என்றும், உயர் கல்வி மேம்பாட்டிற்காக மட்டுமே மாநாடு நடத்தப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு அரசியல் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா எனத் துணை வேந்தர்கள் பலரும் குழப்பத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “மாநாட்டை நடத்துவதற்காக முதல் நாள் மாலையே ஆளுநர் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்துவிட்டார். குடியரசுத் துணைத் தலைவரும் ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டிக்கு வர இருக்கிறார். குடியரசுத் துணைத் தலைவருடன் கவர்னர் துணை வேந்தர்களைப் பொறுத்தவரை மாநாடு முடிந்தால்தான் தெரியும். ஆளுநரும் குடியரசுத் துணைத் தலைவரும் தயாராக இருந்தாலும் எந்தெந்த பல்கலைக்கழகங்களிலிருந்து துணை வேந்தர்கள் பங்கேற்பாளர்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.