விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக தகவல். சட்ட விதிகளை மீறினார்கள் என குற்றஞ்சாட்டும் ஒரு தரப்பு.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பிய நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ம் திகதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக் கிழமை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை வரமாக கிடைத்துள்ளதாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அதெப்படி திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை? நயன்தாரா கர்ப்பமாக இருந்த மாதிரி ஒரு புகைப்படம் கூட கண்ணில் படவில்லையே ? என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த 2 குழந்தைகளையும் நயன்தாரா பெற்றெடுக்கவில்லை எனவும், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி, சட்ட விதி முறைகளை பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் வாடகை தாயாக இருக்கின்ற ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகை தாய்க்கும் உடல் திறன் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
வாடகைத் தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என மொத்தம் 16 மாத காலம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகை தாயாக பயன் படுத்த முடியும் அப்படி பார்த்தால் வாடகை தாயாக இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த உறவுக்கார பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் ஆனால் இவர்களுக்கு திருமணம் முடிந்தே 4 மாதங்கள் தான் ஆகின்றது. தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்து குழந்தையோ, வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது போன்ற சட்ட விதிகள் உள்ளன.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த ஜோடி விதிகளை மீறியதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எப்படியிருந்தாலும் இது தொடர்பாக தம்பதியே சுய விளக்கம் அளித்தால் தான் முழு தகவல்கள் தெரியவரும்.